#LetherSign பற்றி

இலங்கை முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) கீழ், முஸ்லிம் பெண்கள் தங்களது சொந்த விவாகப் பத்திரத்தில் கையெழுத்திடத் தடை செய்யப்பட்டுள்ளனர் – விவாகப் பிரகடனப் பத்திரம் மற்றும் விவாகப் பதிவேடு.  #LetHerSign என்பது முஸ்லிம் பெண்களினால், இலங்கை முஸ்லிம் பெண்கள் தமது சுயாதிகாரத்துடனும், சுதந்திரத்துடனும் விவாகத்திற்குள் நுழைவதற்கான தன்னாளுமை உடையவர்கள் என்ற உரிமையைப் பற்றி அறிவுறுத்துவதற்காக வழிநடத்தப்படும் ஒரு பிரச்சாரமாகும்.  

மேலும் இது, எமது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான பத்திரங்களில் நாம் கையெழுத்திட முடியாதிருக்கும் நிலைமையில் தொடங்கி நியாயமற்ற மற்றும் நேர்மையற்ற விவாகரத்து நடைமுறைகள் வரையிலும், விவாகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) கீழ் நாம் சமத்துவமற்ற குடிமக்களாகத் தொடர்ந்தும் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வழிவகைகளை முன்னிலைப்படுத்த முயலுகின்றது. MMDA திருத்தத்தினது தாமதம் மற்றும் அதன் பொய்யான வாக்குறுதிகளினால் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாக பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் வளர்ந்து வரும் விரக்தியின் விளைவாக இந்தப் பிரச்சாரம் வெளிப்பட்டு வருகின்றது. 

மிக அடிப்படையான இஸ்லாமிய மற்றும் அடிப்படை உரிமையாக பௌதிகரீதியாக திருமணத்திற்கு சம்மதமளித்தல், திருமணம் சார்பாக சுயாதிகாரத்துடன் தீர்மானம் எடுத்தல் மற்றும் குடும்பச் சட்டத்தில் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தல் போன்றவை, இந்த வருடத்தில் MMDA இனது அவசர, விரிவான திருத்தத்தின் மூலம் உத்தரவாதமளிக்கப்பட வேண்டும் என நாங்கள் கோருகின்றோம்! 

இது முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த செயற்பாட்டுக் குழுவினால் (MPLRAG) தொடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பிரச்சாரமாகும். 

இதன் முக்கியத்துவம் என்ன

ஒருவர் தனது விவாகப் பத்திரத்தில் கையெழுத்திட முடியாதிருக்கும் நிலைமையானது இலங்கை முஸ்லிம் பெண்கள் இன்று எதிர்கொள்ளும் அபத்தமான மற்றும் உச்ச பாகுபாட்டினைக் குறித்துக் காட்டுகின்றது. இந்த அநீதியான நிலைமையைத் திருத்தியமைப்பதில் காட்டப்படும் தாமதம் மன்னிக்க முடியாததாகும். இதன் விளைவாக முஸ்லிம் பெண்களது வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில்  அதிகளவிலான முஸ்லிம் பெண்கள் கட்டாய விவாகத்திற்குள்  தள்ளப்படுகிறார்கள் அல்லது ஏமாற்றப்படுகின்றார்கள். அவர்களுக்குத் தாம் யாரை விவாகம் செய்வது என்ற தெரிவு மறுக்கப்படுவதுடன் அவர்கள் விவாகம் செய்து கொள்ளும் போது தமது சொந்த வாழ்க்கை தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதற்கான சுயாட்சியும் மறுக்கப்படுகின்றது. இது, தோல்வியுற்ற விவாக உறவுகள், சமத்துவமற்ற அதிகாரம் மற்றும் விவாக உறவுகளுக்குள் மரியாதைக் குறைவு என்பனவற்றை மட்டுமன்றி, அதிகரித்துச் செல்லும் குடும்ப வன்முறைகள் போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றது. ஹனபி சட்டவியல் மற்றும் போஹ்ரா பிரிவினைப் பின்பற்றுபவர்கள் ஹனபி அல்லது போஹ்ரா என அடையாளங் காணப்படும் முஸ்லிம்  பெண்கள் பெயரளவில் விவாகப் பத்திரத்தில் கையெழுத்திட அனுமதிக்கும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகின்றது – ஆயினும், உத்தியோகபூர்வப் பத்திரத்தில் மணமகள் கையெழுத்திடுவதற்காக இடம் ஒதுக்கப்படவில்லை. கையொப்பமிடுவது நடைமுறையில் இருந்த போதும், அது பெரும்பாலும் விவாகப் பதிவாளரின் தற்றுணிபின் அடிப்படையில் அமைந்திருக்கும். பெரும்பாலான இலங்கை முஸ்லிம் பெண்கள் கையொப்பமிடுவதற்கான தெரிவினைக் கொண்டிருப்பதில்லை என்பதுடன் தங்களது சொந்த நிகாஹ் (விவாகச்) சடங்கில் பங்கு கொள்ளவும் அனுமதிக்கப்படுவதில்லை.  

இப்பொழுது ஏன்?

இலங்கை முஸ்லிம் பெண்கள் இந்தத் திருத்தத்திற்காகக் கடந்த 60 வருடங்களாகக் காத்திருப்பதுடன் இனியும் பாகுபாட்டிற்குள்ளாகத் தயாரில்லை! அவ்வப்போது, தொடர்ச்சியாக அமைச்சரவைகளினாலும், நீதி அமைச்சர்களினாலும் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் MMDA திருத்தத்திற்கான உறுதிமொழிகள் எடுக்கப்பட்டிருந்த போதும் அத்திருத்தம் எப்போது வெளிவரும் அல்லது வெளிவருமா போன்ற விடயங்கள் பற்றிப் பொதுமக்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை. திருத்தத்திற்கான தாமதத்தின் விளைவாக கஷ்டங்களும், வன்முறைகளும், பாரபட்சங்களும் வாழ்வியல் அனுபவங்களாக உருப்பெற்றுள்ளதுடன் கொவிட் 19 சர்வதேசப் பரவல் காரணமாக அதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இத்திருத்தமானது சமூக உரிமைகள் பற்றிய தெளிவற்ற கருத்துகள் பற்றியதோ அல்லது சிறுபான்மையினர் மீதான அரசியல் அச்சுறுத்தல்கள் பற்றியதோ அல்ல. இது முஸ்லிம் பெண்களுக்கான சமத்துவத்தையும், நீதியையும் மற்றும் முஸ்லிம் குடும்பங்களின் நன்னிலையையும் பற்றியதாகும். 

நீங்கள் எவ்வாறு இதில் பங்கெடுக்கலாம்?

#LetHerSign அனைத்து இலங்கை மக்களையும், முஸ்லிம் பெண்களுக்கு எதிரான இந்த நீண்டகால அநீதி மற்றும் பாகுபாட்டிற்கு எதிராகக் குரலெழுப்பத் தூண்டுவதுடன் மேலதிகத் தாமதமின்றி MMDA திருத்தத்தையும் கோருகின்றது. இதில் நீங்கள் பங்குகொள்ளக் கூடிய சில வழிகளாவன:

பரிந்து பேசுபவராக இருங்கள்!

செயல்

  • உங்களது சொந்தக் கருத்துகள் மற்றும் அனுபவங்கள் பற்றி எழுதுங்கள், கலை ஆக்கங்களை  உருவாக்கி ட்விட்டர், முகநூல், இன்ஸ்டகிரம், டிக்டொக் அல்லது ஏனைய தளங்களில் சூடுநவர்நசளுபைn என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சில சிந்தனைத் துளிகள்:
  • முஸ்லிம் பெண்கள் தங்களது விவாகப் பத்திரத்தில் கையெழுத்திட முடியாத நிலைமை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
  • முஸ்லிம் பெண்கள் கையெழுத்திடுவதன் அவசியம் என்ன?
  • அவசியப்படும் மாற்றம் என்ன? 

பரப்புபவராக இருங்கள்!

செயல் 1

MMDA திருத்திற்காக வாதிடும் முஸ்லிம் பெண்கள், சகபாடிகள் மற்றும் நண்பர்களினால் ஆரம்பிக்கப்பட்ட #LetHerSign பிரச்சாரத்தின் முக்கியமான பிரச்சாரத் தகவல்களைப் பகிர்ந்து, பரப்புவதுடன் அவை பற்றிக் கலந்துரையாடுங்கள்.

செயல் 2

நீங்கள் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர் அல்லது கலைஞராக இருப்பின் – MMDA திருத்தத்தின் தேவையை வெளிப்படுத்தி இப்பிரச்சாரத்தைப் பற்றிய வலைப்பதிவிடுகைகள், ஊடகக் கட்டுரைகள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவிடுகைகளை எழுதுங்கள். 

செயல் 3

உங்களது சக ஊழியர் மற்றும் குடும்ப வட்டாரங்களில் – அல்லது உள்ளூர்  பள்ளிவாயல்கள், சமயத் தலங்கள்போன்றவற்றில் முஸ்லிம் பெண்கள் தங்களது சொந்த விவாகப் பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கான தடையை இரத்துச் செய்வதற்கான இந்தப் பிரச்சாரம் தொடர்பான உரையாடல்களைத் தொடக்கி நடாத்துங்கள்

பிரச்சாரம் மற்றும் MMDA திருத்தம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு: 

வலைத்தளம்:  www.mplreforms.com

முகநூல்:  @mplreformslk

ட்விட்டர்: @mplreforms

இன்ஸ்டகிரம்;: @mplreforms 

மின்னஞ்சல்: mplreforms@gmail.com