முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை (MMDA) திருத்துவதற்கான சட்ட மூல வரைபுக்கு பதிலளிக்கும் விதத்தில் 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பரிந்துரைகளை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஜூன் 08, 2023 திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக சமர்ப்பித்துள்ளனர். MMDA சட்டத்தை திருத்துவதற்காக 2021 இல் நியமிக்கப்பட்ட குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, நீதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூல வரைபில் பிரதிபலிக்கும் அனைத்து முன்னேற்றகரமான திருத்தங்களையும் நிராகரிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு நீதிபதி சலீம் மர்சூப் தலைமை வகித்த குழுவினால் உருவாக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நிலைப்பாடுகளைக் கூட பின் தள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய பரிந்துரைகள் அமைந்துள்ளன.
நீதியமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர்: A.H.M. பவுசி, ரிஷார்ட் பதியுத்தீன், கபீர் ஹாஷிம், A.L.M. அதாவுல்லா, நசீர் அஹமட், M.S. தௌபீக், இஷாக் ரஹ்மான், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், S.M. மரிக்கார், மர்ஜான் பழீல், A.H.M. அப்துல் ஹலீம், K. காதர் மஸ்தான், S.M.M. முஷாரப், பைஸால் காசீம், அலி சப்ரி ரஹீம், இம்ரான் மஹ்ரூப் மற்றும் M. முஸம்மில்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளில் எந்த வித திருத்தங்களும் இல்லை
பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளில் MMDA திருத்தம் தொடர்பில் வியக்கத்தக்க வகையில் பிற்போக்கான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மிக மோசமான பரிந்துரைகளில் பின்வருவனவும் உள்ளடங்குகின்றன:
- திருமணப் பதிவில் ஆண் பாதுகாவலரின் கையொப்பம் கட்டாயம். இது திருமணப் பதிவில் பெண் கையொப்பமிடுவதனை எதுவித பெறுமதியும் இல்லாமலாக்குகின்றது.
- MMDA சட்டத்தின் கீழுள்ள பதவிகள் பெண்களுக்கு தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றது, திருமணப் பதிவாளர்களாக ஆண்கள் மாத்திரமே செயற்பட முடியும். காதிகளாக (நீதிபதிகளாக) பெண்கள் உள்ளடக்கப்படுவது பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
- காதி நீதிமன்ற முறைமை எந்த வித மாற்றங்களும் இன்றி பேணப்பட வேண்டும், காதி நீதிபதிகளை நியமிப்பதற்கான அளவுகோல்கள் மற்றும் தொடர் செயன்முறையில் எந்த வித மாற்றங்களும் இல்லை.
- திருமணம் செய்ய அனுமதிக்கும் ஆகக் குறைந்த வயதாக 18 இனை பேணுவதற்கு விதிவிலக்குகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
- அதிகமான பாகுபாடுகளைக் கொண்ட தற்போதைய விவாகரத்து முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் சமத்துவமான விவாகரத்து நடைமுறைகள் மறுக்கப்பட்டுள்ளன.
- திருமண சொத்துக்களை பகிர்தல் மற்றும் பிள்ளைகளின் சிறந்த நலன்களைப் பாதுகாத்தல் தொடர்பான புதிய ஏற்பாடுகள் (சட்டமூல வரைபில் அறிமுகப்படுத்தப்பட்டவை) மறுக்கப்படுகின்றன.
- இலங்கை முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள வேறுபட்ட முஸ்லிம் பிரிவுகள் மற்றும் மத்ஹப்கள் (சட்டவியல் பிரிவுகள்) இடையே காணப்படும் பாகுபாடுகளை தொடர்ச்சியாகப் பேணுதல்.
இவ்விடயம் தொடர்பில் பரந்த சமூகத்தின் இடையே கட்டியெழுப்பப்பட்ட உரையாடல்கள், அத்துடன் மிகவும் தனித்துவம் மிக்க வகையில் நீதியமைச்சு முன்னெடுக்கும் முறைசார் சட்ட தொடர் செயன்முறைகள் ஆகிய இரண்டு அம்சங்களிலும் அண்மைய வருடங்களில் இவ்விடயம் தொடர்பில் எட்டப்பட்ட முன்னேற்றங்களுக்கு இந்த நிலைப்பாடுகள், குந்தகம் விளைவிப்பனவாக அமைகின்றன.
கொள்கைகளற்ற வெறும் அரசியல்: காலத்துக்கு காலம் மாறுபடும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடுகள்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அண்மைய இந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாடுகள் இதே பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களின் திருமண வயது எந்தவித விதி விலக்குகளுமின்றி 18 ஆக அமைய வேண்டும்; திருமணப் பதிவாளர் மற்றும் காதி நீதிபதி பதவிகள் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும்; பராமரிப்பு பணம் வழமையான நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டும்; அத்துடன் காதி நீதிபதியின் அடிப்படைத் தகுதி சட்டத்தரணியாக அமைய வேண்டும் என ஜூலை 11, 2019 அன்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாகக் குறிப்பிட்டதற்கு முரணாக அமைந்துள்ளன.
நவம்பர் 18, 2022 அன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பு உள்ளடங்கிய முஸ்லிம் ஆண்களை பெரும்பான்மையாகக் கொண்ட முஸ்லிம் சிவில் சமூகக் கூட்டமைப்பு நீதியமைச்சுக்கு தமது நிலைப்பாடுகளை சமர்ப்பித்திருந்தது. அதனை 13 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது வழங்கியுள்ள பரிந்துரைகள் முஸ்லிம் சிவில் சமூகக் கூட்டமைப்பு வழங்கியிருந்த சமர்ப்பிப்புகளுக்கு முரணாகக் காணப்படுகின்றன. இந்த சமர்ப்பிப்பில், திருமணத்துக்கான ஆகக் குறைந்த வயது 18 ஆக அமைய வேண்டும், பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படலாம், வலீயின் (பாதுகாவலரின்) கையொப்பம் விருப்பத் தெரிவுக்குரியது, எனவே வலீ கையொப்பமிடவில்லை என்பதற்காக திருமணத்தை செல்லுபடியற்றதாக ஆக்க முடியாது அத்துடன் காதியின் அடிப்படைத் தகுதியாக அவர் ஒரு சட்டத்தரணியாகக் காணப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் காணப்பட்டன.
ஜூன் 2023 இல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பு ஆகிய இரு தரப்புகள் மாத்திரம் பங்கு பற்றிய மிகவும் இரகசியமான உரையாடல்களின் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தோன்றுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள் MMDA திருத்தங்கள் தொடர்பில் பல தசாபதங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணியை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகின்றன
பல தசாப்தங்களாக இஸ்லாமிய அறிஞர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் சமூகத்தின் கரிசனை கொண்ட உறுப்பினர்களால் MMDA தொடர்பில் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, ஆலோசனை மற்றும் விவாதம் என்பவற்றின் அடிப்படையில், ஜூன் 2021 அறிவுரைக் குழு (அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய இஸ்லாமிய அறிஞர்கள் கல்விமான்கள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய குழு) நீதியமைச்சருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. இவ்வறிக்கையில், இஸ்லாமிய சட்டவியல், ஷரீஆ, இலங்கையின் அரசியலமைப்பு என்பவற்றுக்கு ஏற்புடைய வகையில் MMDA சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் விளக்கப்பட்டிருந்தன. மேலும், MMDA அதன் தற்போதைய வடிவத்தில் ஏற்படுத்தும் தீங்கான தாக்கங்களும் குறித்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பரிந்துரைகளுடனும் MPLRAG உடன்படாத போதும், குறித்த அறிக்கை சட்ட ரீதியாக, சமூக ரீதியாக மற்றும் கோட்பாட்டு ரீதியாக ஏற்கப்படக் கூடிய வடிவத்தில் காணப்பட்டதுடன் அது இலங்கையின் முஸ்லிம் குடிமக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மையை வழங்கும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தது.
MMDA என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு மேற்கொள்ளப்படும் தீவிரமான மற்றும் தீங்கான அநீதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக பெண் செயற்பாட்டாளர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளின் கீழ் பல தசாப்தங்களாக மேற்கொண்ட பணிக்கு குந்தகம் விளைவிப்பதாக மேற்குறிப்பிட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தீவிரமான பழமைவாத மற்றும் பாகுபாடு மிக்க நிலைப்பாடுகள் அமைகின்றன. கடந்த 60 வருடத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் அரசினால் நியமிக்கப்பட்ட ஆறு நிபுணர் குழுக்கள் மேற்கொண்ட பணியினையும் இவர்களின் நிலைப்பாடு பொறுப்பற்ற விதத்தில் நிராகரிப்பதாக அமைகின்றது. முஸ்லிம் குடிமக்களை உண்மையில் பாதிக்கின்ற அந்தரங்கமான பிரச்சினைகளை தீர்ப்பதை தட்டிக் கழிக்கின்றமை முஸ்லிம் சமூகத்தின் நல்வாழ்வை விட அவர்களின் குறுகிய அரசியல் சுய நலன்களே இந்த அரசியல்வாதிகளுக்கு முக்கியமான விடயமாக உள்ளதை எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றது. விசேடமாக, அநீதியால் துயருறும் மிகவும் பாதிக்கப்பட்ட, அத்துடன் நிவாரணத்துக்காக இன்னும் காத்திருக்கும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதிநிதித்துவப் பொறுப்பை புறம் தள்ளியவர்களாகவே நோக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் சமூகங்கள் இடையே அச்சத்தை வளர்த்தல்
அண்மைய சட்டமூலம் இலங்கையில் முஸ்லிம் சமூகங்களின் அடையாளத்தை இல்லாது ஒழித்து விடும் என சமூகத்தை அச்சமூட்டும் மலினமான அரசியல் உத்தியை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கைக்கொண்டு வருகின்றனர். 2021 ஆம் ஆண்டின் ஆலோசனைக் குழுவின் அடிப்படையில் அமைந்த திருத்த சட்ட மூலத்தில் ‘முஸ்லிம்’ என்ற வார்த்தை “இஸ்லாத்தை பின்பற்றும் நபர்கள்” என்று மாற்றப்பட்டதை தமது குற்றச் சாட்டுக்கான சான்றாக அவர்கள் முன் வைக்கின்றனர் – எனினும் வரைவிலக்கண அடிப்படையில் நோக்கும் வேளை “இஸ்லாத்தை பின்பற்றும் நபர்கள்” என்பது முஸ்லிம்களையே குறிக்கின்றது.
யதார்த்தத்தில், நீதிபதி மஸ்ரூப் குழுவின் 2018 ஆண்டின் அறிக்கையில் இந்த மொழிநடைக்கு ஏகமனதான உடன்பாடு கிடைத்தது, இக்குழுவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இரண்டு பிரதிநிதிகளான அஷ்-ஷெய்க் M.I.M. றிஸ்வி முப்தி மற்றும் அஷ்-ஷெய்க் M.M. அஹமட் முபாரக் உள்ளடங்கியிருந்ததுடன் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் ஏனைய பலர் உள்ளடங்கியிருந்தனர். இவர்கள் வேறு பல விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்த போதும் மொழிநடை தொடர்பில் கருத்துபேதமின்றி உடன்பாடு கண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு முஸ்லிமுக்கான சட்ட வரைவிலக்கணத்தை ஒத்ததாக இது அமைகின்றது. அது இஸ்லாமிய மதத்தை வலியுறுத்துவதுடன் இலங்கை முஸ்லிம்களைக் குறிப்பிடும் ஏனைய சட்டங்களுக்கும் இசைவானதாகக் காணப்படுகின்றது.
முன்னேற்றகரமான திருத்தங்கள் மீது அவை இஸ்லாத்துக்கு முரணானவை என சேறு பூசும் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வை பாதுகாக்க நீண்ட காலத் தேவையாகக் காணப்படும் MMDA சட்டத்தின் முழுமையான திருத்தம் தொடர்பான பொது உரையாடலை திசைதிருப்பும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான திருத்தம் என திருத்தத்துக்கான எதிர்ப்பை உருவாக்க பயமுறுத்தும் உத்திகள் பயன்படுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்.
முன்னேறிச் செல்வதற்கான வழி
பின்வரும் விடயங்களை மேற்கொள்ளுமாறு கையெழுத்திட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் கோருகின்றோம்:
- MMDA திருத்தம் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள பிற்போக்கான நிலைப்பாடுகள் ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்புகளை ஏற்றுக் கொள்தல்;
- இந்த பிற்போக்குத் தனமான முன்மொழிவுகளுக்கு ஆதரவளிக்கும் தமது தீர்மானத்தினை மீளாய்வு செய்து அதனை மாற்றுதல்; அத்துடன்
- பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு பகிரங்கமாக ஆதரவளித்தல்.
நாட்டின் பன்மைத்துவ சமுதாயத்தில் நேர்மறையான முஸ்லிம் அடையாளத்தை கட்டியெழுப்பும் அத்துடன் இலங்கையில் உண்மையான இஸ்லாமிய விழுமியங்களை பாதுகாக்கும் பரந்த நலன்களை பிரதிநிதித்துவம் செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் மேலும் வலியுறுத்துகின்றோம்.
பின்வரும் விடயங்களை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சரை நாம் கோருகின்றோம்:
- இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தத்தின் சட்டமியற்றும் தொடர் செயன்முறையை நிலைப்படுத்தி கட்டியெழுப்பும் அதே வேளை இதனைத் தாமதப்படுத்தும் விடயங்களை அனுமதிக்காதிருத்தல்;
- முஸ்லிம் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய முன்னேற்றகரமான திருத்தங்களை முன்கொண்டு செல்லவும்; அத்துடன்,
- முஸ்லிம் பெண்கள் பல தசாப்தங்களாக MMDA திருத்தங்கள் தொடர்பில் மேற்கொண்டு வரும் பரப்புரைக்கு துரோகமிழைக்கும், அவர்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காத, அனைவரும் கூருணர்வற்ற ஆண்களாகக் காணப்படும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் மோசமான முன்மொழிவுகளுக்கு இணங்குவதைத் தவிர்க்கவும்.
இந்த முன்மொழிவுகளை முன்கொண்டு செல்லும் உள்ளார்ந்த குறுகிய அரசியல் சுயநல நோக்கங்கள், திருத்த தொடர் செயன்முறையை நிறுத்த பயன்படுத்தப்படும் பொறுப்புக் கூறல் மற்றும் பொருத்தமான நடைமுறையற்ற நிலைகள் அத்துடன் ஜுலை 08, 2023 திகதியிடப்பட்ட பரிந்துரைகளில் பிரதிபலிக்கின்ற மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பற்ற தன்மைக்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.
MMDA சட்டத்துக்கு முழுமையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத வரை இச்சட்டம் உலகளாவிய ரீதியிலேயே மிகவும் பாகுபாடு மிக்க, பிற்போக்கான முஸ்லிம் குடும்பச் சட்டமாக தொடர்ந்தும் காணப்படும். முஸ்லிம்களை பெரும்பான்மையாகவும் சிறுபான்மையாகவும் கொண்டுள்ள நாடுகள் தமது குடும்பச் சட்டங்களில் பெண்களுக்கு சிறப்பான மற்றும் அதிக நியாயமான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.
ஜூலை 08, 2023 அன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் முஸ்லிம் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் துரோகமாக அமைகின்றது. இலங்கையின் அனைத்து முஸ்லிம் சமூகங்களும் இலங்கையில் பாகுபாடற்ற நிலையை, நீதியை மற்றும் கௌரவத்தை அடைந்து கொள்வதை வேண்டுமென்றே தடுக்கும் முயற்சியாகவே இது அமைகின்றது. MMDA முழுமையாகத் திருத்தப்பட வேண்டும்; அதுவே முன்னேறிச் செல்வதற்கான ஒரேயொரு வழியாகும்