ஒரு வருடத்திற்கு முன்னர், 2019 ஆகஸ்ட் 22 ஆம் திகதி, அப்போதைய முஸ்லிம் விவகார அமைச்சினால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA) சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரைகளின் தொகுதியொன்றை அப்போதைய அமைச்சரவை அங்கீகரித்தது. எவ்வாறாயினும், ஒரு வருடத்தின் பின்னர், சீர்திருத்தம் தொடர்பில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) கீழ் நிகழும் பாகுபாடு மற்றும் அநீதி மற்றும் சிலவேளைகளில் வன்முறைகளைக் கூட முஸ்லிம் பெண்கள் சகித்துக்கொள்ளவேண்டிய மேலும் இன்னொரு வருடமாகின்றது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் (MMDA) மற்றும் காதி நீதிமன்ற முறையிலுள்ள பிரச்சினைகளும் சவால்களும் நன்கு அறியப்பட்டதும் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டனவையுமாகும். 1951 ஆம் ஆண்டு அது சட்டமாக்கப்பட்டது முதல், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் (MMDA) மற்றும் காதி நீதிமன்ற முறையில் நடைமுறையிலிருந்த பாரபட்சமிக்க ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் அநீதி மிகுந்த நடைமுறைகளினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம் பெண்களே என்பது மறுக்க முடியாததாகும். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டமானது (MMDA) முஸ்லிம் பெண்களையும் சிறுமிகளையும் இரண்டாம் தரப் பிரஜைகளாக மாற்றியுள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரமளிக்கும் வரையிலான நிகழ்வுகளை மீட்டிப்பார்த்தல்
ஏப்ரல் 2019 இல் நடைபெற்ற துன்பகரமான உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களையடுத்து, முஸ்லிம் சமூகத்தின் மீதான கவனம் அதிகரித்ததைத் தொடர்ந்து, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA) சீர்திருத்தம் மீது அதீத கவனம் செலுத்தப்பட்டது. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA) சீர்திருத்தம் உட்பட பல சீர்திருத்தங்களை ஆதரிக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்புடன் முனைந்தனர். 2019 யூலை மாதம்,அப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சில முற்போக்கான நிலைப்பாடுகளை உள்ளடக்கிய பரிந்துரைகளின் தொகுதியொன்றைக் கொண்டு வந்தனர்.
சமூகத்தின் பழைமைபேண்வாதிகள் உடனடியாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது செல்வாக்குச் செலுத்தினர். முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்த செயற்பாட்டுக் குழு (MPLRAG) மற்றும் பிற முஸ்லிம் பெண்கள் குழுக்கள் சீர்திருத்தம் எந்த நோக்கத்திற்காகத் தேவைப்படுகின்றதோ அதற்கேற்ப வடிவமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் பழமைவாத குழுக்கள் மற்றும் சில முற்போக்கான மத அறிஞர்களுக்கிடையே பேரம்பேசும் கூட்டங்களை ஏற்பாடு செய்தனர்.
ஏமாற்றமளிக்கும் விதமாக, 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி அப்போதைய முஸ்லிம் விவகார அமைச்சினால் நீதி அமைச்சிற்கு அனுப்பப்பட்ட இறுதி ஆவணம் முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது மற்றும் பெண் காதிமார் போன்ற முக்கியமான சமத்துவம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை. பெயரளவிலான இச்சீர்திருத்தம் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே இனங்காணப்பட்ட பிரச்சினைகளுகளுக்குத் தீர்வு காணவோ அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் மேம்பாட்டிற்கோ பிரயோசனப்படவில்லையென்று பெண்கள் குழுக்கள் மீண்டும் வலியுறுத்தின.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA) சீர்திருத்தம் குறித்த அமைச்சரவைப் பத்திரம் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பொறுத்தவரை தோல்விகரமான ஒன்றாகும்
அமைச்சரவை அங்கீகாரமளித்த பரிந்துரைகள், மகளிர் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களுடனும், சீர்திருத்தம் குறித்து ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட 2009 குழுவின் உத்தியோகபூர்வ அறிக்கையின் (நீதிபதி சலீம் மர்சூப் குழுவின் (JSM) அறிக்கை) தலைவரின் பரிந்துரைகளுடனும் ஒப்பிடும்போது கணிசமானளவில் குறைவாகவிருந்தன. ஏனையவை உள்ளடங்கலாக முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தங்கள், திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதுக்கு விதிவிலக்குகளை வழங்கியது, சமமான விவாகரத்து உரிமைகளை வழங்கவில்லை, பலதாரமணத்தை ஒழிக்கவில்லை, பெண்களை காதிகளாக அனுமதிக்கப் பரிந்துரைக்கவில்லை மற்றும் காதி நீதிமன்றங்கள் எத்தகைய தரநிலைகளைக் கொண்டிருக்க வேண்டும், அவை எந்தளவிற்கு மேம்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடவில்லை.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA) சீர்திருத்தத்திற்கான தற்போதைய சவால்கள்
கடந்த சில ஆண்டுகளில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் (ACJU) பழமைவாத சமூகக் குழுக்களிடமிருந்து வரும் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அனைத்துமே குறிப்பாக ஓங்கியொழிப்பதாகவும் சீர்திருத்தத்திற்கு எதிரானதாகவும் இருப்பதைக் காணக்கிடைத்தது. இந்த நடவடிக்கைகள் முஸ்லிம் பெண்களின் சமத்துவம் மற்றும் நீதி மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றினை மறுதலிப்பவையாக இருந்தன.
கடந்த வருடம், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை (MMDA) ஒழிக்க வேண்டுமென முஸ்லிம்களுக்கு எதிரான தேசியவாதக் குரல்களையும் நாங்கள் கண்டோம். ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கையை ஊக்குவித்த இந்த அழைப்பு, சிறுபான்மையினரின் பரந்துபட்ட உரிமை நீக்கத்தினையும் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் மத மற்றும் கலாசார உரிமைகளின் வெளிப்பாடுகளையும் குறைப்பதை நியாயப்படுத்த முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளைப் பயன்படுத்துவதாகவே தோன்றியது. ஒரு பெரும்பான்மைச் சூழலில் ‘ஒரு சட்டம்’ என்ற கருத்து சிறுபான்மை உரிமைகள் மற்றும் கரிசனைகளைச் சாதகமாக அங்கீகரிக்க முயற்சிக்க வேண்டும் என்பதை அது கருத்திலெடுக்கத் தவறிவிட்டது. இது முஸ்லிம் பெண்களின் அனுபவங்களை புறத்தொதுக்கிய மற்றுமொரு குரலாகும்.
இலங்கையின் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் உரிமை மறுக்கப்பட்ட குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில், இந்த உதாரணத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பொறுத்தவரையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பதென்பது ஒரு தொடரும் நிரந்தரமாகும். ஒவ்வொரு நாளும் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்கும் நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்வதற்கான அரசியல் திடசங்கற்பம் ஒருபோதும் காணப்பட்டதில்லை.
இத்தகைய பல சவால்களைக் கருத்திற்கொள்ளும்போது, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை (MMDA) பகுதி, பகுதியாக அல்லது பெயரளவிலாகச் சீர்திருத்துவது சட்டமியற்றுபவர்களுக்கு ஒரு கவர்ச்சியான தெரிவாகும். ஆயினும், துண்டு துண்டான சீர்திருத்தங்கள் இத்திருத்தங்களிற்கான நோக்கத்தை அடையத் தவறும் என்பதும் இது முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மற்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தொடர்ந்தும் இந்த அடக்குமுறைமையின் கைகளில் பாதிக்கப்படுவர் என்பதையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
என்ன சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA) சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கம் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், இதன் மூலம் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் ஆகும். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் (MMDA) விரிவாக சீர்திருத்தப்படுவதைத் தவிர இலங்கையின் முஸ்லிம் பெண்களுக்கான நீதியை உறுதி செய்வதற்கான வேறு வழிகள் எதுவுமில்லை. எனவே, 2009 முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA) சீர்திருத்தக் குழு பரிந்துரைத்த பரிந்துரைகளை ஒரு தொடக்க புள்ளியாக எடுத்துக் கொண்டு அனைத்து கருத்து வேற்றுமைகளும் அர்த்தமுள்ளவகையில் தீர்க்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அவை மேம்படுத்த வேண்டும்.
சீர்திருத்த முன்னுரிமைகள் பின்வருமாறு:
- சிறுவர் திருமணம் – அனைத்து முஸ்லிம்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயது எந்தவொரு விதிவிலக்கும் இல்லாமல் 18 வருடங்களாக இருக்க வேண்டும்.
- பெண் காதிமார்– பெண்கள் காதிமார்களாகவும், காதிமார் சபையின் உறுப்பினர்களாகவும், திருமண பதிவாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களாகவும் (ஜூரர்கள்) நியமிக்க தகுதியுடையவர்களென உள்ளடக்கப்பட வேண்டும்.
- ஒரேசீரான தன்மை– பிரிவு அல்லது மத்ஹப் அடிப்படையில் நபர்களுக்கு பிரதிகூலம் விளைவிக்காமல் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் (MMDA) அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஒரே மாதிரியாகப் பிரயோகிக்கப்பட வேண்டும்.
- மணமகளின் ஒப்புதலும் சுயாட்சியும் – அனைத்து உத்தியோகபூர்வ திருமண ஆவணங்களிலும் மணமகன், மணமகள் கையெழுத்து அல்லது கட்டைவிரல் ஒப்பம் கட்டாயமாகும். 18 வயதிற்கு மேற்பட்ட வயதான முஸ்லிம் பெண்களுக்கு சம சுயாட்சிக்கு உரிமை உண்டு, திருமணத்திற்குள் நுழைவதற்கு எந்தவொரு ஆண் உறவினர் அல்லது காதியினது ‘சம்மதம்’ கோருவது சட்டத்தினால் தேவைப்படுத்தப்படாது.
- பதிவு செய்தல் – திருமணத்தின் சட்டப்பூர்வ செல்லுபடியாக்கத்திற்கு கட்டாயப் பதிவு தேவை.
- திருமண ஒப்பந்தங்கள் – திருமணத்திற்கு முன்னர் முஸ்லிம் தம்பதியினரால் உடன்படிக்கை செய்யும் ஒப்பந்தம் எனும் கருத்தை அறிமுகப்படுத்துதல், அங்கீகரித்தல் மற்றும் எளிதாக்குதல், அங்கு அவர்கள் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பல நிபந்தனைகளுள் ஒரு தாரமணம் என்பதையும் தேர்வு செய்யலாம்.
- சீதனம் – வரதட்சணை / கைக்கூலியை ஒழித்தல் – அல்லது, குறைந்தபட்சம், நம்பிக்கையில் கொடுக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாச் சொத்துகளின் விவரங்களை பதிவு செய்வது கட்டாயமாக இருக்க வேண்டும், மேலும் அது திருமணத்தை கலைத்தவுடன் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
- பலதாரமணம் – பலதாரமணத்தை ஒழித்தல் – அல்லது, குறைந்தபட்சம், பலதார மணம் விதிவிலக்கான சூழ்நிலைகளில், பின்வரும் நிபந்தனைகளின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்: பொருளாதாரத் தகைமை, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒப்புதல் மற்றும் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் நியாயம் நிலைநாட்டப்படும் பட்சத்தில் அனுமதிக்கப்படலாம்.
- விவாகரத்து – விவாகரத்து ஏற்பாடுகள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமமாக பொருந்த வேண்டும். தலாக் மற்றும் பஸஹ் விவாகரத்து பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும். கணவன்-மனைவி தொடங்கிய விவாகரத்துக்கான நடைமுறைகள் மேன்முறையீட்டு செயல்முறை உட்பட ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். விவாகரத்து வகைகள் (பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து உட்பட), விவாகரத்துக்கான காரணங்கள் மற்றும் பயனுறுதியும் வினைத்திறனும் வாய்ந்த விவாகரத்துச் செய்முறை முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இவை MMDA சட்டத்தினால் நிர்வகிக்கப்படும் அனைவருக்கும் ஒரே வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும்.
- பராமரிப்பு மற்றும் இழப்பீடு – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பராமரிப்பு கொடுப்பனவுகளை மதிப்பீடு / கணக்கிடுவதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் (MMDA) வழங்க வேண்டும். கணவரின் தவறு நிறுவப்பட்ட சந்தர்ப்பங்களில் கணவனால் மனைவிக்கு மாதாஹ் (இழப்பீடு) செலுத்துவதற்கு முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் (MMDA) கட்டாய ஏற்பாடு செய்ய வேண்டும்.
- காதி நீதிமன்றங்கள் – பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நீதிக்கான தகுதிவாய்ந்த மற்றும் வினைத்திறனான அணுகலை உறுதி செய்வதற்கும், வலுவான கண்காணிப்பு பொறிமுறையை உறுதி செய்வதற்குமாக, காதி நீதிமன்ற அமைப்பின் தரம் மற்றும் காதியின் தகைமையை மேம்படுத்துதல்.
- காதி நீதிமன்றங்களை கண்காணித்தல் – காதி நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் பதிவுகளை வலுவாக மற்றும் வழக்கமாகக் கண்காணிப்பதற்கு ஒரு முறையை நிறுவுதல்.
- தெரிவு செய்வதற்கான விருப்பம் – முஸ்லிம் தம்பதிகள் விரும்பினால் பொதுத் திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் (GMRO) கீழ் திருமணம் செய்து கொள்ளும் தெரிவினை வழங்கல்.