இலங்கையின் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை (MMDA) திருத்துவதற்கான வரலாற்று சந்தர்ப்பம் வந்து வாய்த்துள்ளது. ஆயின் மீண்டும் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அரசியல் சகதிக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்கள் முகங்கொடுக்கின்ற வாழ்க்கை அனுபவங்களை சுரண்டலுக்குள்ளாக்கி, அவற்றை வெறுப்பைத் தூண்டப் பயன்படுத்துவது மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம் பெண்களது நெறிமுறையான உரிமைகளை அகற்ற முனையும் வகையில் MMDA இனை நீக்கவேண்டும் என எழுகின்ற கோரிக்கைகளை MPLRAG கண்டிக்கிறது. அத்தோடு முஸ்லிம் பெண்கள் முகங்கொடுத்து வருகின்ற சவால்களை அலட்சியப்படுத்தி, தீர்மானம் எடுக்கும் படிமுறைகளில் முஸ்லிம் பெண்களை புறந்தள்ளி, இலங்கை முஸ்லிம் சமூகங்களில் பாரிய விளைவை ஏற்படுத்தக் கூடிய, MMDA இனை நீக்கக் கோரும் இனவாத கோரிக்கைகளுக்கு, தாராளமாய் தீனி போட்டு இத்தனை காலமும் MMDA திருத்தத்தினை மேற்கொள்ள முடியாதவாறு திருத்தத்திற்கு எதிராக ஊக்கமுடன் குரல்கொடுத்து, தொடர்ச்சியாக இழுத்தடித்து வந்த முஸ்லிம் ஆண் தலைவர்களை MPLRAG வன்மையாகக் கண்டிக்கிறது.
MMDAவும், பெருந்தொற்றும்
இலங்கையில் முஸ்லிம் பெண்களும், சிறுமிகளும் கொவிட்-19 இன் காரணமாக எண்ணற்ற பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இது அவர்களது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்வில் வன்முறையினதும், கட்டுப்பாட்டினதும் உச்சங்களைத் தொட்டிருந்தது. காதி நீதிமன்றங்களை அணுகுவது மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், இந்தக் காலத்திலும் தொடர்ச்சியாக MMDA காரணமாக பலர் குடும்ப விடயங்கள் சார்பாக எதுவித நிவாரணத்தையும் பெற முடியாதிருந்தது.
ஏறத்தாள ஒரு வருடமாக, முஸ்லிம்களது சமய நம்பிக்கைகளுக்கு எதுவித மரியாதையும் இன்றி கொவிட்-19 தொற்றினால் அல்லது தொற்றாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தினால் மரணித்த உடல்களை எரியூட்ட வேண்டும் என்ற அரசின் குரூர கொள்கையின் எதிர்விளைவுகளை உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் முஸ்லிம் பெண்கள் தமது தோள்களில் சுமந்து வருகின்றனர்.
முஸ்லிம் பெண்கள் தமது குடும்பங்களினதும், சமூகத்தினதும் பாதுகாவலர்களாக இருந்து வரும் அதேவேளை தாம் இரண்டாம் தர பிரசைகளாக நடாத்தப்படும் அரசிடம் நீதியையும், சமத்துவத்தையும் கோரி தொடர்ந்தும் வாதாடி வருகின்றனர். இது இலங்கை முஸ்லிம் பெண்கள் மீது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதற்கு MPLRAG சாட்சியாக இருக்கின்றது. அத்துடன் இக்கால கட்டங்களில் அவர்களது போராட்டம், அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சல் என்பதற்கும் MPLRAG சான்று பகர்கிறது.
MMDA திருத்தம் அல்லது நீக்கம் என்பதற்கான வாய்ப்புக்கு மத்தியில்
கடந்த 30 வருடங்களாக திருத்தத்தினைக் கோரி வந்த முஸ்லிம் பெண்களுக்கு வன்முறையான அரசியல் பின்னணியில் சமூகத்துக்குள்ளும் சரி, அப்பாலும் சரி குடும்பச் சட்ட விடயங்கள் தொடர்பாக பணியாற்றுவது மிகப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. நீதியமைச்சர் அலி சப்ரி அவர்கள் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெளிவாக உறுதியளித்துள்ளார். MMDA நீக்கப்பட வேண்டும் என்ற இனவாத குரல்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரம் சமூகத்துக்குள் முஸ்லிம் ஆண் தலைவர்கள், பெண்கள் கோரும் அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்ளாமல் இன்னமும் எவற்றை முற்படுத்துவது என பேரம்பேசிக் கொண்டிருப்பது பெரும் அயற்சியைத் ஏற்படுத்துகிறது. இந்த முஸ்லிம் ஆண் தலைவர்கள் முக்கிய தீர்மானம் எடுக்கும் படிமுறைகளில் முஸ்லிம் பெண்களை தொடர்ந்தும் விலக்கியே வைத்திருந்தது மட்டுமன்றி சட்டத்தை நீக்கக் கோரும் அழைப்புகளுக்கு அநியாயமாகப் பெண்களைப் பழி சொல்கின்றனர்.
கடந்த 30 வருடங்களாக முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை (MMDA) திருத்துவதற்குத் தடையாக இருந்தவர்கள் முஸ்லிம் ஆண் தலைவர்களே என்பதில் துளியும் சந்தேகமில்லை. MMDA இல் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் தவறியமையே இன்று அச்சட்டத்தை இல்லாமலாக்க வேண்டும் என்ற இனவாதத்திற்கு எண்ணெயூற்றியுள்ளது. MMDA இல்லாதொழிக்கப்பட்டால் அதற்குரிய காரணம் முஸ்லிம் பெண்களும், சிறுமிகளும் முகங்கொடுத்துவரும் வாழ்க்கை அனுபவங்களைப் புறந்தள்ளி தத்தமது பழைமைவாத கண்ணோட்டத்தையே தூக்கிப்பிடிக்கும் இலங்கை முஸ்லிம் ஆண் தலைவர்களே அன்றி வேறில்லை.
முன்னோக்கிச் செல்ல: MMDA இல் கோரப்படும் திருத்தங்கள் அத்தனையையும் மேற்கொள்ளல்
நிச்சயமற்ற இத்தருணத்தில், இரண்டு சவால்களுக்கு முகங் கொடுக்க முஸ்லிம் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர். முதலாவது சமத்துவமற்ற முஸ்லிம் குடும்பச் சட்டத்தில் முழுமையான திருத்தத்தினைச் செய்வதற்கு பிடிவாதமாக மறுக்கின்ற பழைமைவாத முஸ்லிம் ஆண் சமூகத் தலைவர்கள். மற்றையது முஸ்லிம் பெண்கள் முகங்கொடுக்கின்ற வாழ்க்கை அனுபவங்களை சுரண்டலுக்குள்ளாக்கி அவற்றை வெறுப்பைத் தூண்டப் பயன்படுத்துவதுடன், இலங்கையின் அனைத்து முஸ்லிம் சமூகங்களதும் நெறிமுறையான உரிமைகளை அகற்ற முனையும் வகையில், MMDA இனை நீக்க வேண்டும் என இனவாதிகளிடமிருந்து எழுகின்ற பொறுத்துக் கொள்ள முடியாத, நேர்மையற்ற அழைப்பு.
முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 12இற்கு அமைவாக MMDA இனைத் திருத்துவதாகும். சமயம், இனம், மொழி, இன்னபிற எந்தவொரு காரணத்தின் அடிப்படையிலும் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்படாமலிருப்பதற்கான உரிமை முஸ்லிம் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படை உரிமை, எமது அரசியலமைப்பு, அதுவே அனைத்து பிரசைகளுக்குமான ஒரே சட்டம்.
இந்நாட்டின் பன்மைத்துவத்தை கொண்டாடுகின்ற, அனைவருக்குமான அடிப்படை சுதந்திரத்தை மதிக்கின்ற அனைத்து இலங்கையரும், சமூகங்களும் மற்றும் அரசியல் தலைவர்களும், இந்த வரலாற்றுத் தருணத்தில், MMDA இல் கோரப்படுகின்ற அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தல் வேண்டும்.