முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தை மாற்ற வேண்டிய தேவை தற்போது ஏற்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம். இலங்கையில் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்ட சீர்திருத்தங்களின் நீண்டகால பயணத்தை இக்கருத்துக்கள் அங்கீகரிக்கத் தவறுகின்றன. முஸ்லிம் பெண்கள், சிறுமிகள் மற்றும் குடும்பங்கள் அனுபவிக்கும் தீவிர பாகுபாடு மற்றும் தீங்கு குறித்து பல தசாப்தங்களாக முஸ்லிம் பெண்கள் மற்றும் குழுக்கள் கரிசனை முன்வைத்து வருகின்றனர். தற்போதைய முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் மற்றும் குவாசி முறையின் கீழ் பாகுபாடு காரணமாக முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தினசரி அடிப்படையில் தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான தாக்கங்களை அமைச்சரின் இந்த கருத்துக்கள் நிராகரிக்கின்றன.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் சிறுவயது திருமணம் இன்னும் சட்டபூர்வமானது என்பதை அமைச்சர் ஹேரத்துக்கு நினைவூட்டுகிறோம், அதாவது இன்றுவரை, முஸ்லிம் சிறுவர்களின் உரிமைகள் அவர்களின் சகாக்களின் உரிமைகளைப் போல பாதுகாக்கப்படவில்லை. பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்களின் கீழ் இலங்கையின் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற சட்டம் தவறியுள்ள நிலையில், இது அரசின் பொறுப்பு தொடர்பான முதன்மையான பிரச்சினையாகும். இதுபோன்ற பல பாரபட்சமான பிரச்சினைகள் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் இன்னும் காணப்படுகின்றன.
இலங்கை முழுவதிலுமுள்ள முஸ்லிம் பெண் குழுக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்காக முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்ட சீர்திருத்தங்களை வலியுறுத்தி வருகின்றன. 1956 முதல் அக்காலகட்ட அரசாங்கங்களால் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன, அவை மிகவும் தேவையான சீர்திருத்தங்களை பரிந்துரைக்கின்றன. பலதார மணத்தை அனுமதித்தல் மற்றும் குவாசி முறை ஆகிய இரண்டு பிரச்சினைகள் சர்ச்சைக்குரியதாக இருந்த போதிலும், மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழுக்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் விளைவாக ஒரு சட்ட மூலம் உருவாக்கப்பட்டது.
அமைச்சர் ஹேரத்தும் தேசிய மக்கள் சக்தி கட்சியும் இந்த முன்னேற்றத்தை ஒதுக்கி வைக்க முடிவு செய்தால் பல தசாப்த கால ஆலோசனைகள் மற்றும் சட்ட சீர்திருத்த முன்னேற்றம் இழக்கப்படும். எந்தவொரு நபரோ அல்லது அரசியல் கட்சியோ கடினமாக வென்ற இந்த வெற்றிகளில் பின்வாங்குவதை ஏற்க முடியாது. இலங்கையின் முஸ்லிம் சமூகங்களில் உள்ள பழமைவாத ஆண்களிடமிருந்து சட்டமியற்றுபவர்கள் மீது வைக்கப்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து அரசியல் விருப்பமின்மை மற்றும் நிலைப்பாடுகளின் மாற்றம் ஆகியவை சீர்திருத்தத்திற்கான முந்தைய அனைத்து முயற்சிகளையும் பலவீனப்படுத்தியுள்ளன. மாற்றத்தை வாக்குறுதியளிக்கும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஒளிமறை பேச்சுவார்த்தைகளைச் செய்யவோ அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக நிலைப்பாடுகளில் சாய்ந்து கொள்ளவோ கூடாது.
முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை என்ற அடிப்படையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தங்களில் ஈடுபடுமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் முஸ்லிம் தனிநபர் சட்ட சீர்திருத்த நடவடிக்கை குழு (MPLRAG) பல பெண்கள் குழுக்களுடன் இணைந்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. எந்தவொரு முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்ட சீர்திருத்த செயல்முறைகளிலும் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் மையப்பொருளாக முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த நாட்டின் முஸ்லிம்கள் என்ற வகையில் எமக்கென குடும்பச் சட்டங்களை வைத்திருப்பதற்கு உரிமை இருக்கின்ற அதேவேளை, மதம், பாரம்பரியம் அல்லது கலாசாரத்தின் பெயரால் எமது மனித உரிமைகள் ஒருபோதும் மீறப்பட முடியாது.
சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை மற்றும் தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதை உறுதி செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி(NPP) எப்போதும் ஆதரவாகவும் வரவேற்புடனும் இருந்தது. அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளையும் போலவே தேசிய மக்கள் சக்தி(NPP) கட்சிக்கும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் ஹேரத்தின் கருத்துக்கள் குறித்து தேசிய மக்கள் கட்சி தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும். இந்த பிரச்சினையானது ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆதரவுக்கும் எதிர்வரும் தேர்தல்களில் இந்த அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய ஆதரவு தொடர்பானதுமான விடயமாகும்.
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பை பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னுரிமை அளிக்குமாறு தற்போதைய மற்றும் வரவிருக்கும் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.